சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் 168 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைத்தானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 375 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 42.4 ஓவரில் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இந்திய அணியின் சார்பில் இப்போட்டியில் அணித்தலைவர் விராத் கோஹ்லி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 96 பந்துகளில் 131 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா 88 பந்துகளில் 104 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இப்போட்டியில் சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த கோஹ்லி ரோஹித் ஜோடி 219 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மெத்தியூஸ் 24 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை பெற்றதுடன் கடந்த போட்டியில் சிறந்த பந்து வீச்சு பெறுதியை பெற்ற அகில தனஞ்சய 68 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
இப்போட்டியில் டுப்பாட்டத்தில் இலங்கை அணிசார்பில் சகலதுறைவீரர் ஏஞ்சலோ மெத்தியூஸ் அதிகபடியாக 70 ஓட்டங்களையும் சிறிவர்தன 39 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் நிதானமற்ற துடுப்பாட்டத்தால் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்திய அணிசார்பில் பந்து வீச்சில் குல்தீப் ஜாதவ் 31 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் பும்ராஹ் 32 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக விராத் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.








